சினிமாவின் முந்தைய பரிணாம வளர்ச்சியும், கலை உலகின் ஜீவநாடியும் மேடை நாடகங்கள் தான். இன்று சிகரம் தொட்ட அனைத்து நடிகர்களும் ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக ஜொலித்தவர்கள். டிராமா என்னும் ஆங்கிலச் சொல் (DRAMENON) என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து தோன்றியது.
பிறர் செய்வதைப் போல நாமும் செய்ய வேண்டும் என்ற ஊந்துதலே நாடகம் என்றார் அரிஸ்ரோட்டில்.
நாடகம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்றார் பரத முனிவர்
நடனத்தில் இருந்தே நாடகம் தோற்றம் பெற்றது என்று ஹில்லேப் பிராண்ட் குறிப்பிட்டுள்ளார்
பாவைக் கூத்தில் இருந்து நாடகம் தோற்றம் பெற்றதாக பியூல் குறிப்பிட்டுள்ளார்.
பொம்மலாட்டத்தில் இருந்து நாடகம் தோற்றியம் என்று லீடர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாடு + அகம் என்பது நாடகத்தின் பொருள்
நாடு என்பது மக்களைக் குறிக்கும் அகம் என்பது அவர்களின் உள்ளங்களைக் குறிக்கும் மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைவடிவமே நாடகம் நிஜத்தில் சாதுவான ஒருவர் மேடையில் நடிகனாக தன் முகத்தில் நவசரத்தையும் காட்டவேண்டும். நாம் வெளியே போகும் போது எத்தனையோ காட்சிகளைப் பார்கிறோம் ரசிக்கிறோம் சில நம் மனதில் ஆழமாய் பதிந்தும் போய்விடுகிறது. அப்படிப் பதிந்த காட்சியை நமது பிம்பத்தை திரையில் மற்றொருவர் செய்து காட்டும் போது மகிழ்கிறோமே ?! நடிகன் சிரித்தால், அழுதால், கோப்பட்டால் என அத்தனை உணர்வுகளும் நம்முள்ளும் எழுகிறது அப்படி உணர்வுபூர்வமாக உணரச்செய்வதற்கு பெயர்தான் கலை. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் கூட படம் முடிவடைந்த பிறகுதான் ஆனால் நாடகம் அப்படியில்லை கத்தியின் மேல் நடப்பதைப் போன்றது நாடகக் கலைஞன் பார்வையாளர்களின் விழிகள் என்னும் கத்திக்கு மேல நடப்பவனாகிறான்.
சரி அக்கால நாடகங்கள் எப்படித் துவங்கப்பட்டது. நாடக மேடையைத் தயார் செய்வதற்கு பூர்வரங்கம் என்று பெயர் இதில் பதினெட்டு விதமான செயல்கள் உண்டு. நாந்தி என்னும் கடவுள் வாழ்த்து ஸ்லோகங்கள் ஒலிக்கும். சில நேரம் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் உள்ள தொடர்பு அவை காவியங்களாக இருந்தால் அந்த கிளைக்கதைகளுக்கு முந்தைய சம்பவங்கள் முதலியவற்றை தனியாகவோ இன்னொரு கதாபாத்திரத்துடன் உரையாடி விளக்கும் மனிதரை கட்டியங்காரர் அல்லது சூத்திரதாரர் என்று கூறுவோம் இப்போது கெளதம் வாசுதேவ் மேனன் படங்களில் இம்மாதிரி பின்னணியில் வாய்ஸ்ஓவரில் கதைகள் விளக்கப்படுவதைப் பார்த்திருக்கலாம்.
நாடக மேடைகள் வெறுக்கத்தக்க காட்சிகள், கைகலப்பு சண்டைகள், மரணம் போன்றவை காண்பிக்கப்படுவதை தவிர்த்துவிடுவார்கள். சில அபத்தங்களை எல்லாம் விமர்சனமாக நகைச்சுவை உணர்வுடன் சொல்லி வைத்திருப்பார்கள்.
ஆனால் தற்போது நாடகங்கள் என்றாலே இன்று சின்னத்திரையின் மெகா சீரியல்கள்தான் நினைவிற்கு வரும். 90களுக்கு முந்திய தொலைக்காட்சிப் பெட்டியில் திரைஒன்று போடப்பட்டு இருக்கும் தேவையில்லாத நேரத்தில் அதை பூட்டி வைத்துக்கொள்ளலாம் ஆனால் 2019 சுவற்றில் தொங்கப்படும் பெரிய அளவிலான தொலைக்காட்சிகள் காலையில் இருந்து மாலை வரை மக்களை நாடகங்கள் மூலம் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இரவு நேரங்களில் மறுஒளிபரப்பு வேறு. அப்படியென்ன அவற்றில் இருக்கிறது. கஷ்டப்படும் குடும்பம், அதை தாங்கிப்பிடிக்கும் தியாக உருவமாக கதாநாயகி, எட்டாத உயரத்தில் கதாநாயகன் வேலைக்காரியாக வந்து மணமாகும் நாயகி, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சேர விடாமல் தடுக்கும் ஒரு வில்லி கதாப்பாத்திரம் எப்படி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விஷம் வைக்கலாம் என்ற எல்லையைத் தாண்டி வீட்டுக்குள் பாம்பு விடும் வரையில் போய்விடுகிறது அதிலும் ஒரு பாம்பை அந்தவாரம் தத்து எடுக்கும் சானல்கள் அதனை எல்லா நாடகங்கத்திலும் ஒரு காட்சியாகி விடுகிறது இதற்கு பேயும், கடவுளும் கூட விதிவிலக்கில்லை.
தன் கணவன் இறந்து விட்டான் என்று ஓரே நம்பினாலும் நாயகி நம்பாமல் பூவும்பொட்டும் வைத்துக்கொள்வார் எங்கிருந்தோ எப்படியோ லாஜிக்கில்லாமல் கணவரும் வந்துவிடுவார் ஆனால் சுயநினைவில்லாமல் இப்படிப்பட்ட கதைகள் தான் நாடகங்களில் உலாவருகிறது. இதுவா நாடகம் அதன் உண்மை அர்த்தத்தை இன்று பலர் புரிந்து கொள்வதில்லை. மேடை நாடகம் என்ற கலை இப்போது வெகு வேகமாக அழிந்து வருகிறது. இன்னும் சில நாடகக் கலைஞர்கள் ஆலமரவிழுதாக இருந்து அந்தக் கலையை காப்பாற்றி வருகிறார்கள். அந்த நாடக அரசர்களை கெளரவிக்கும் தொடர் இது.
அன்றைய நாடகங்களில் சமூகம் குறித்த அக்கறைகள் இருந்தது, சுதந்திரப் போராட்டத்தின் வித்துகளாக இந்த நாடகம் அநேக கிராமங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தது. ஒலிப்பெருக்கி இல்லாத காலத்தில் கூட மக்களிடம் தங்களின் கணீர் குரலில் வெகு அழகாக கதையை தெரிவித்த நாடகக்காரர்கள் அநேகம்.
மரப்பொம்மைகளையும் மரத்தாலான விளையாட்டு பொம்மைகளை நூல்களில் கோர்த்து அதை அன்புடன் நெருங்க வைத்து, கோபத்தில் கொதிக்க வைத்து, ஆச்சரியத்தில் துள்ளி குதிக்க வைத்தது இப்படி மக்களை மகிழ்வித்தது மரப்பாவைக் கூத்து. மரத்தாலான பொம்மைகளுக்கு பதிலாக தோல் பொம்மைகளில் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற உருவங்களை செய்து அவை வளைந்து நெளிந்து விடாமல் இருப்பதாக இவற்றை மூங்கில் குச்சிப்பட்டைகளில் தைத்து, மேடையில் காட்டப்பட்ட கூத்துக்கு தோல்பாவைக் கூத்து எனப்பட்டது.
அதற்கடுத்த வளர்ச்சியாய் நிழற்பாவைக் கூத்து தோல் பாவைகளை நேரடியாக காட்டாமல் வெள்ளைத் திரைச்சீலைகளுக்குப் பின்னால் ஒளிபொருந்திய விளக்குகளை வைத்து காட்டப்பட்ட பிம்பம்தான் நிழற்பாவைக் கூத்து. ஆரம்பகாலத்தில் இராமாயணம் பாரதம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட கதைகள் வடிவமைக்கப்பட்டன. இவையெல்லாம் பள்ளி மாணவன் தன்னுடைய அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதைப் போல பொம்மை மனிதன் இருந்த இடத்தில் உண்மை மனிதன் வந்தான் பொம்மைக்குப் பூசப்படாத அரிதாரம் மனிதனுக்குப் பூசப்பட்டது. விளையாட்டுக் கலை என்னும் குழந்தை மெல்ல மெல்ல வளர்ந்து நாடகக்கலையாய் மேடையை அலங்கரித்தது. இப்போது கூட நாடகத்திற்கு பிளே (PLAY) என்னும் இன்னொரு சொல் உண்டு.
நாடகத்திற்கு என கதைகள் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது மக்களின் ரசனைக்காக சமூக கதைகள் தனியாக எழுதப்பட்டன. கதையின் கருவையும், அக மற்றும் புற அனுபவங்களையும் பேச்சின் மூலம், சில செயல்களின் மூலம் வெளிப்படுத்துகிறதும், இப்போதைய ஒரு சின்னத்திரை தொடரின் காட்சியைக் இயக்குநர் விருப்பபடி கொண்டு வருவதற்கு இரண்டு மூன்று முறை எடுப்பார்கள். விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றைய தினத்தில் தன்னுடைய பதிவுகளை கொண்டு சேர்ப்பது கூட வெகு சுலபம். ஒரு தொலைக்காட்சி நாடகம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்போகிறது என்றால் அதற்கு முன்னால் ஒரு 3 நிமிட காணொளி பிரமோ என்னும் பெயரில் வெளியிடப்படுகிறது.
ஆனால் அப்போதைய நாடகங்களின் இறுதியில் கலைஞர்கள் அடுத்த நாடகம் எப்போது என்று தெரிவிப்பார்கள். பிட்நோட்டீஸ் எடுத்துக்கொண்டு ஒரு மாட்டுவண்டியில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுப்புகள் வெளியே வரும். இன்னமும் பின்னோக்கிப் போனால் ஏழாம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலையும், பதினோராம் நூற்றாண்டில் இராஜராஜசோழன் ஆட்சிக்காலத்திலும் நாடகம் நடைபெற்றதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றது என்று தொல்லியல் துறை கூறுகிறது.
தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகமும், பள்ளுவகை நாடகங்கள் உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையிலும் அமைந்திருந்தன. கிராமப்புறங்களில் தெருக்கூத்து திருவிழாச்சமயங்களில் விடியவிடிய நடைபெறத் துவங்கியது பின்னர் நாடகத்தில் உரையாடல்களின் ஆதிக்கம் வந்தபிறகு மூன்று மணிநேரத்திற்குள் முடிக்கப்பட்டன.
நாட்டு விடுதலைக்காக நாடக மேடைகளில் சுதந்திர போராட்ட உணர்வைத் தூண்டும் விதமாக தேசியகொடி தேசபக்தி போன்ற நாடகங்கள் போடப்பட்டது. 20நூற்றாண்டில் நாடகத்துறையில் மிகப்பெரிய பங்காற்றியவர் நாடகஉலகின் இமயமலை என்று போற்றப்பட்டவர் சங்கரதாஸ்சுவாமிகள். பிலகலாதன், இலவகுசா, பவளக்கொடி போன்று நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருந்தார். தமிழ்நாடகத் தந்தை எனப்போற்றப்பட்டும் பம்மல் சம்பந்தனார் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவரது மனோகரன் நாடகம் எழுபது ஆண்டுகளாக தமிழ்நாடக மேடையில் புகழ்பெற்று விழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கலையும், அதை செயல்படுத்தும் கலைஞனும் ஆக்கவழியில் செல்ல வேண்டும். அன்பு உறுதியான செயல் பக்தி உயர்ந்த எண்ணம் இவையெல்லாம் நாடகங்கள் மூலமாக மக்களை சென்றடைந்தது. ஒருவரை எது மகிழ்விக்கிறதோ அதுவே நாடகம்.
–
லதாசரவணன்
மின்கைத்தடி பொறுப்பாசிரியர்
அருமை…
வாழ்த்துகள்.