தமிழ்த் தலைமுறை

0
241
Tamil Letter Wallpapers - Top Free Tamil Letter Backgrounds ...
தமிழ் எத்தனை வகைப்படும்?
தெரியுமா அம்மா? என்கிறாய்..
அடுத்த நொடியே சிரித்தபடி
பதிலும் உரைக்கிறாய்..
செந்தமிழ், பைந்தமிழ்,தீந்தமிழ்,
வண்டமிழ், நற்றமிழ் என்றடுக்கி
ஒற்றைப் புருவம் தூக்கி
எனை நோக்கி சிரிக்கிறாய்..
இன்னும் இருக்கிறது மகளே..
அன்பைச் சுமந்து வந்த
அம்மாவின் தாலாட்டுத் தமிழ்..
தைரியம் கற்றுத் தந்த
அப்பாவின் தன்னம்பிக்கைத் தமிழ்..
கடல்புறாவும் பொன்னியின் செல்வனும்
தாத்தாவுக்கு படித்துச் சொன்ன
சங்கம் கண்ட சரித்திரத் தமிழ்..
படுத்துறங்கும் போதெல்லாம்
 பாட்டி சொன்ன கதைத் தமிழ்..
அத்தைக்கும். சித்திக்கும்
எழுதி எழுதியே அன்றைக்கு
கற்றுக் கொண்ட கடிதத் தமிழ்..
என்று இன்னும் இருக்கிறது..
மூச்சிரைக்க நீ வரிசைப்படுத்திய
வேகம் கண்டு மட்டுமல்ல..
உன்னிடம் இவற்றையெல்லாம்
கொண்டு சேர்க்க முடியாத
குற்ற உணர்விலும் உன் முன்னே
மண்டியிட்டுத் தலைகுனிகிறேன் நான்..
– கிருத்திகா கணேஷ் கவிதைகள்