மனிதர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா? ஏன் எங்களுக்கு இல்லையா?

0
243

Urban city homeless street dog

“கொரோனா என்னும் இந்த வைரஸ் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அப்படியே புரட்டி போட்டு இருக்கிறது. சாலையோரக் கடைகளில் இருந்து பெரிய நிறுவனங்கள் வரை அத்தனையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள்  மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. கொரோனாவால் மனிதர்களுக்கு மட்டும் தானா பாதிப்பு. இல்லை… நம் அன்றாட வாழ்வில் கூடவே இருக்கும் அத்தனை பிராணிகளும் போதிய உணவின்றி  தவித்து வருகின்றன” இதுபோன்ற பிராணிகளை பேணி பாதுகாக்கவேண்டும் என்று சொல்கிறார், செல்லப்பிராணிகளை வைத்து ரெஸ்டாரன்ட் நடத்தும் ரேகா தண்டே.

சென்னையில், டிவிஸ்ட்டி டெய்ல்ஸ் என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார் ரேகா தண்டே. இந்த ரெஸ்டாரன்டின் சிறப்பே உணவருந்திக் கொண்டே இங்கு அழகழகான நாய்களுடன் விளையாடலாம். சுமார் 16 நாய்க்குட்டிகள் இந்த ரெஸ்ட்டாரன்ட்டில் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். இந்த நாய்களுக்காகவே ஏராளமான பிரபலங்கள் இங்கு வருவதுண்டு. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பித்ததில் இருந்து அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறுகிறார் டிவிஸ்ட்டி டெய்ல்ஸ் உரிமையாளர் ரேகா.

Urban city homeless dog lonely

இந்த நெருக்கடியான நிலைமை மற்றவர்களை போல என்னையும் நிலைகுலையச் செய்தது. ஆனால் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னதான் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிலைமை சீரடைந்தாலும் பழைய மாதிரி வாடிக்கையாளர்கள் வருவார்களா என்பது சந்தேகமே” என்று கூறுகிறார் ரேகா.

என் செல்ல நாய்குட்டிகளை ஆசையாக கொஞ்சியவர்கள் கூட இனி தொடுவதற்கே தயக்கம் காட்டுவார்கள் என்றார். ஆனால் அதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் எனது நேரத்தை என் செல்லப் பிராணிகளுடன் கழித்து பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறேன். அவற்றுக்கு தேவையானவற்றை செய்கிறேன்.” அத்துடன் பாசிட்டிவ் என் ஆர்கனைசேஷன் மூலம் நண்பர்களுடன் இணைந்து தெருவோரங்களில் இருக்கும் 500 நாய்களை பராமரித்து வருகிறார்.  

இதில் ரேகா மட்டும் 15 நாய்களை தத்தெடுத்து அவற்றுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். கண்ணில் பட்ட நாய்களுக்கு தன்னால் உதவ முடியும் ஆனால் இதுபோன்ற ஏராளமான நாய்கள் சாலைகளில் உணவின்றி அலைந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் யார் உணவு கொடுப்பார்கள் என்றவரின் குரலில் நியாயமான வருத்தம் தெரிந்தது.

“முடிந்த வரை தெருவோர நாய்களை பாதுகாக்கவோ, அவற்றுக்கு உணவு கொடுக்கவோ பலரும் முன்வரவேண்டும், அதேபோன்று மன இறுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விலங்கு சார்ந்த சிகிச்சையில் ஈடுபட விரும்புகிறேன். அதற்கான பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ரேகா கூறியிருக்கிறார்.

இந்த உலகம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. அவற்றுக்கு முடிந்த வரை தீமை செய்யாமல் இருப்பதே பெரிய நன்மை என்று கேட்டுக்கொள்கிறார் ரேகா.

எழுத்து: கலை