நடந்து பாருங்க…

0
271

Close up on running shoes fitness women training and jogging

விடுவிடுவென்று நடக்கும் தந்தையை ஓடிப் போய் விரல் பிடித்து இணைந்து நடக்க முயலும் பிள்ளையைப் பார்த்து இருப்போம். நீண்ட கால்களில் எட்டி வைத்த அடிகளைக் குறுக்கி குழந்தையின் குட்டி குட்டி அடிகளுக்கு இணைவாக நடக்கும் தந்தையும் ரசித்து இருப்போம் வித்தியாசங்கள் மனதில் ஓடும்தானே! அப்பாவின் நீண்ட  உறுதியான விரலை தனது கையினுள் கையகப்படுத்தி நடக்கும் தளிரின் நடையில் எவ்வளவு நம்பிக்கையும் பெருமிதமும்!

நடைச் சிறப்பு என்பது நீங்கள் நினைப்பது போல அத்தனைச் சாதாரணமானது அல்ல. ஓய்வாக எந்த விதக் கட்டளையுமின்றி உடல் தளர்த்திய நடை , மனம் தளர்த்தும் . இசைந்து நடக்கையில் சிக்கலைத் தீர்க்கும் புதிய வழிகள் பிறக்கும். இரசனை உணர்வை மேம்படுத்தும். தனித்த மனதின் விசும்பலை செவி மடுக்கும். தற்கொலையும் தடுக்கும்.

நீர்வழித் தடத்தில் வந்து தரையில் இறங்கிய ஆண்டனி வானில் பறக்கிறோமா என்று தன் கால்களை ஒரு முறை நோக்கி விட்டுத் தரையில் புன்னகையுடன் நின்றிருந்த கிளியோபாட்ராவைக் கண்டு பார்வை விலக்காது, நடக்கத் தொடங்கிய அவளுடன் உடன் நடக்கத் தயங்குகிறான். அவள் பின்னால் நடந்தால் முன்னழகைக் காணமுடியாதுப் போகும், அவளுக்கு முன் நடந்தால் திரும்பினாலும் பின்னழகைக் காண  இயலாது. என்ன செய்வதென யோசித்து இணைந்து நடந்தால் பார்வையை ஓடவிட்டு முன் பின் அழகை ரசிக்க முடியும் என இணையாக நடக்கிறான். நடக்கும் அந்த நேரத்திலும் அவளைக் காணும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அவன். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பின், அரச வாழ்வின் நியதியாகவோ நியதியின்மையாகவோ அவள் தற்கொலை செய்து கொண்டதாகப் பரப்பப்பட்ட வதந்தியை உண்மையென்றெண்ணி தனது போர் ஆயுதத்தால் தன்னை மாய்த்துக் கொண்டான் என்றும் கூறுகிறது வரலாறு. பிறகு அவளும் கொடிய விடமுள்ள அரவத்தின் துணை கொண்டு தன் உயிரை நீக்கிக் கொண்டாள். இந்த அன்புதான் என்னவெல்லாம் செய்கிறது…!
போகட்டும்,

மாறுபட்ட வேகம் ஒரு ஒருவருக்கும், அத்தகைய மாறுபாட்டை   மட்டுப்படுத்தி அல்லது வேகப்படுத்தி ஒரே வேக அளவினதாக்கி இணைந்து நடக்கையில் கிடைக்கும் வசதியான இருப்பு மனதின் சுகந்தம் . (வேகுவேகுவென்று நடக்கும் நடைப்பயிற்சியை  இத்துடன் ஒப்புமைச் செய்து குழம்பிக் கொள்ளாதீர்கள். இது தனி. ) உங்களுக்குத் தெரியாது. , எவரிடமும் பகிர இயலாமல் ஆழ்ந்த சோகத்தில் அமிழ்ந்து மனதின் அநாதைத் தன்மையை சுய பச்சாதபத்தின் மூலமாயும் உணர்ந்து வெளியில் தெரியா கண்ணீருடன் இருக்கையில் யதார்த்தமாய் அமைந்து விடும் ஒரு இணைந்த நடை மீண்டு வாவென உயிர் நீர் அளிக்கும்.

சண்டை சச்சரவு மனக்குமுறல் என்று இருக்கும் சக மனிதருடன் பின்மாலைப் பொழுதொன்றை நடந்து களியுங்கள். போகும்போது இருக்கும் இறுக்கம் திரும்பி வருகையில் தொலைந்து போயிருப்பதைக் காண முடியும். மனதிற்கென இருக்கும் விரிவும் மணமும் மெல்ல அணைக்க முயல்வது அத்தனைச் சுகம்.

ஒருவரின் மீது முரண் எண்ணங்களின் தொகுப்பை முதுகில் சுமந்து கொண்டு இணைந்து நடந்து விடாதீர்கள். பாதையை பறவையை ஒளியை சருகை மனிதரை வேடிக்கைப் பார்க்கும் மனநிலையில் நடக்கத் தொடங்குங்கள். பேசித்தான் ஆக வேண்டுமென்பதில்லை. பேசாமலேயே நடக்க வேண்டும் என்பதுமில்லை. முகைத் திறப்பு போன்று பேச்சு அதன் போக்கறிந்து இனிமையாக நடையோடு இணைந்து கொள்ளட்டும். ஆழ்ந்த மெளனம் இதழ்கள் பிரிக்கா மலர் போன்று மென்மையாக மனம் சேரட்டும்.

பகிர்தல் என்பது பேச்சும் மனமும் உடலும் மட்டுமல்ல அருகிருந்து கமழும் மெளனமும்தான். அத்தகைய மெளனத்தை நடை நவிலும். உணர்ந்து ருசியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தவருடன் மாலையின் செஞ்சூரியனின் ஒளியிலோ, காலையிலோ, இரவிலோ, ஏதேனும் வாகனத்திற்காகவோ , இடத்திற்கோ,  கடைக்கோ எதற்கோ எதன் பொருட்டோ செல்லும் அவசரகதி இல்லாத அழகான நடை உங்களுக்குள் செளகரியத்தையும் உறவையும் உறுதியாக்குவதை உணர்வீர்கள். நேரமும் சூழலும் வாய்க்கும் போதெல்லாம் அல்லது வாய்ப்பேற்படுத்திக் கொண்டு நடந்து பாருங்கள்.

உடன் நடங்க ! உடன்பட்டு நடங்க!!


அகராதி