ஆபத்தான தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலத்தின் நடுவில், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் காவல்துறையினரால் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான விதிகளை நிராகரித்து, கருப்பு, வெள்ளை, ஆசிய மற்றும் பிற இன மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர், இங்கு வேற எந்தவொரு நோயையும் விட இனவெறியே குறைவானது இல்லை.
ஜார்ஜ் ஃபிலாய்ட், மினியாபோலிஸில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பாதுகாப்புக் காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது காரில் இருந்தபோது நான்கு காவல்துறை அதிகாரிகள் அவரை அணுகியதாகவும், கைது செய்வதை எதிர்க்க அவர் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஒரு காவல் அதிகாரி சில நிமிடங்கள் ஃபிலாய்டின் கழுத்தை தனது முழங்காலால் அழுத்தியுள்ளர், ஃப்ளாய்ட் மூச்சுவிட முடியவில்லை எனக் கூறியும் காவல் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை, சுற்றியிருந்த மக்கள் கூச்சலிட்டும் காவல் அதிகாரிகள் சற்றும் அசரவில்லை, சிறிது நேரத்தில் ஃபிலாய்ட் இறந்து போனார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து மக்கள் கொதிப்படைந்தனர். ஃபிலாய்டின் கழுத்தை முழங்காலால் அழுத்திக் கொன்ற போலீஸ்காரர் டெரெக் சாவின் கொலைக் குற்றச்சாட்டில் பின்னர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 காவல் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மீது அரசு எந்த வழக்கும் பதியவில்லை.
கலவரத்தை அடுத்து பரவலாக கொள்ளை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது, மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த காவலர்கள் பிரயோகிக்கும் ஒடுக்குமுறைகள் பற்றிய அச்சமூட்டும் படங்கள் ஊடகங்களில் நிரம்பியுள்ளன. கலவரத்தைத் தணிக்க மினியாபோலிஸ், நேசனல் கார்ட்டை அழைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபிலாய்டின் கொலையை தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரால் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறை குறித்து புதுப்பிக்கப்பட்ட உரையாடல்களைத் தூண்டியுள்ளது. #I can’t breathe என்ற ஹேஷ்டேக் வைரலாகிவிட்ட நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் போராட்டக்காரர்களுக்கு எதிராக அவர்களை ‘thugs’ (குண்டர்கள்) என ட்வீட் செய்து, அவர்களை சுட்டுக் கொல்வதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியாவில், போலீஸ் வன்முறைகள், காவல் மரணங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் ஏற்படும் அப்பட்டமான மாநில வன்முறைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். சமீபத்திய காலங்களில், குடிமக்களுக்கு எதிரான போலீசின் வன்முறை சம்பவங்கள் பல படமாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. அவர்கள் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டுகிறார்கள். ஜார்ஜ் ஃபிலாய்ட் நடத்தப்பட்ட விதம் போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மிகவும் பரிச்சயமானவையாக இருந்தாலும், அதற்கான எதிர்வினைகள் மிகவும் வேறுபட்டவை. போலீசின் மிருகத்தனம் நடவடிக்கைகள் பெரும்பாலும் வகுப்புவாதமாக இருக்கும், அவற்றிற்கு எதிராக தெருக்களில் நடக்கும் போராட்டங்கள் இங்கே போதாது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட வந்துள்ள நிலையில், இந்தியாவில் ஒரு காவலர் காரணமின்றி சாமானிய மனிதனை அடிப்பது சிற்றலையை மட்டுமே தூண்டுகிறது ; பகிரங்கமாக யாரும் அதை எதிர்த்து நிற்கவில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம், நான்கு முஸ்லீம் இளைஞர்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் வீடியோ பரவுகிறது, அவர்களில் ஒருவரான பைசன் என்பவர் பின்னர் இறந்து விடுகிறார். இது இதயத்தை கிழிக்கும் சம்பவம், ஆனால் மற்றவை போன்றே இதுவும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் அந்த தருணத்தில் வெடித்துக் கொண்டிருந்தது, பின்னர் எந்தவொரு கூச்சலும் இல்லாமல் போனது, அமெரிக்காவில் இப்போது நாம் காணும் எதிர்ப்புகள் இந்தியாவில் மிகக் குறைவு.
இந்தியாவில் காவல்துறைக்கு என்றே தனிச் சட்டம் , அவர் கான்ஸ்டபிளோ அல்லது அதிகாரியோ, அச்சமின்றி மக்களை அடிப்பது ஒரு வழக்கமான விஷயம். எந்தவொரு மேலதிகாரியும் அவரை கேள்வி கேட்கப் போவதில்லை, எந்த அரசியல்வாதியும் அவரை விளக்கத்திற்காக அழைக்கப் போவதில்லை, குடிமக்களும் அதை சாதாரணமாக கடந்துச் செல்வார்கள்.
அப்படி யாரேனும் கேள்வி கேட்க நினைத்தாலும், இந்தியர்கள் பலர் காவல்துறையினருக்கு ஆதரவாகவும், அவர்களின் முயற்சியைப் பாராட்டவும் செய்வார்கள்.
போலீசின் மிருகத்தனத்தை, அமெரிக்காவில் எதிர்ப்பது போல் இந்தியாவில் எதிர்க்கமாட்டார்கள். அமெரிக்க நகரங்களில் காவல்துறையை சுத்தம் செய்ய முயன்றுள்ளனர், இந்தியாவில் காவல்துறையை சுத்தம் செய்வதற்கான பல முயற்சிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன, காவலில் இருக்கும் ஒருவரைக் கொன்றதற்காக பொதுமக்கள் போலீசை புகழ்வார்கள்.
1980 களில், ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள்’ மும்பையின் ஹீரோக்களாக போற்றப்பட்டனர்.
குறிப்பாக நகர்ப்புற மையங்களில், நக்சலைட்டுகள் என சந்தேகிக்கப்பட்டாலே சுட்டுக் கொல்லப்படுவதை மக்கள் வரவேற்றார்கள். .
சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்தாக கூறி, மத்திய பிரதேச காவல்துறையினரால், சந்தேகத்திற்குரிய எட்டு சிமி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறை கூறிய காரணங்கள் போலியானது எனத் தெரிந்தும், அரசு அது குறித்து கேள்வி எழுப்பாமல், மாநில உள்துறை அமைச்சரால் பாராட்டப்பட்டது.
2020 மே 17, ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் நடைபெற்று வரும் COVID-19 நாடு தழுவிய ஊரடங்கின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கலைக்க ஒரு போலீஸ்காரர் தடியடியைப் பயன்படுத்துகிறார்.
இதில் கலாச்சாரமும் ஒரு பங்கை வகிக்கிறது. இந்திய திரைப்படங்களில், காவலில் எடுக்கப்படும் சந்தேகத்துக்குரிய நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதை எவ்வித சலனமும் இன்றி மிகச் சாதாரணமாக காட்டுவார்கள், சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் மக்களும் அதை ஏற்பார்கள். ஆனால் ஒரு ஹாலிவுட் படத்தில் உண்மையில் அமெரிக்காவில் இதுபோல் நடந்தாலும், அவ்வளவு சுலபமாக திரையில் காட்டமாட்டார்கள்.
குறிப்பாக நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கங்களுக்கு, ஏழைகள் அல்லது சிறுபான்மையினரை விட காவல்துறையினரிடம் வித்தியாசமான அனுபவம் உள்ளது. குறைந்த பொருளாதார வருமானம் உள்ளவர்கள் போலீசை விரோதித்து கொண்டு வாழ முடியாது, ஆதலால் அவர்கள் போலீசுடன் நன்கு இணைந்திருக்கவே முயல்வார்கள், போலீசுடனான எதிர்ப்பு என்பது அரிதாகவே இருக்கும்,
இதைத் தவிர நடுத்தர வர்க்கங்கள் வீதிக்கு வராததற்கு வேறு எந்த காரணமும் இல்லை, ஏழைகள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பெருமளவில் சென்றபோது அவர்கள் அடிக்கப்பட்டதை நாம் கண்டோம். அமெரிக்காவில் போலீஸ் அடக்குமுறைகளை முக்கிய செய்தித்தாள்கள் உட்பட பல செய்தி நிறுவனங்கள் அதை விரிவாக விவரித்தது; ஆனால் இந்தியவில் குடியுரிமை எதிர்ப்பு (திருத்தம்) சட்டத்தின் போராட்டங்களின் போது இந்திய தொலைக்காட்சிகள் போராட்டக்காரர்களை தேசவிரோதிகள் என அழைத்ததை நாம் பார்த்தோம்.
CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, இந்திய இளைஞர்களிடம் சில வித்தியாசங்களைக் நாம் காணலாம். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதால் முஸ்லிம்களை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையே என அறிந்திருந்தும், CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்திய இளைஞர்கள் பங்கேற்காமல் இருந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆனால் அமெரிக்காவில் தற்போது கருப்பு, வெள்ளை, லத்தீன் மற்றும் பிற இன இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவொரு விசயத்திலும் இந்தியர்கள் நேரடியாக தங்களுக்கு பாதிப்பு வரும் வரை அதை ஏற்றுக்கொண்டுவிட்டு, பாதிப்பு வந்த பின்னர் அதற்காக நொந்து கொள்கிறார்கள். இதேபோல், போலீஸ் அடக்குமுறைகளை நாம் அனைவரும் இணைந்து தகர்க்க வேண்டும், தனிப்பட்ட முறையில் அதனால் பாதிக்கப்படாவிட்டாலும் அதை எதிர்க்க வேண்டும். இவையெல்லாம், கூட்டாகவும், பலமாகவும் நமது கட்டமைப்பை மாற்ற பொது மக்கள் போராட வேண்டிய நேரம் என்பதையே காட்டுகிறது.
‘தி வயர்’ கட்டுரையின் தமிழாக்கம்
ஜெயா
Leave a Comment