
அப்பா…
அம்மாவுக்கு இணையாய்
அந்த பத்து மாதங்களும் – நீங்கள்
நெஞ்சில் சுமந்தீர்கள் எங்களை..
எங்களின் பிஞ்சுப் பாதங்கள்
எட்டி உதைக்கும் போதெல்லாம்
உங்கள் நெஞ்சுக்குள்ளும் தாய்மை
உற்சாகமாய் சுரக்கும்…
எந்த வலியும் தாங்கிக் கொண்டு
யார் முன்னும் சிரிக்கும் உங்களுக்கு
எங்கள் வலியை தாங்கிக் கொள்ள
தைரியம் இருந்ததில்லை..
உங்கள் கனவுகள் என்னவென்று
உற்று நோக்கிய போதெல்லாம்
உங்கள் கண்களில் நாங்கள் கண்டதோ
எங்களை மட்டும் தான்..
தோல்வியுற்ற நேரங்களில்..
வலி மிகுந்த தருணங்களில்..
இலேசாய் விழிமூடி
மெலிதாய்த் தலையசைத்து
பாத்துக்கலாம் விடு என
சொல்லாமல் சொல்லி
ஆறுதலாய் அரவணைக்கும்
உங்கள் புன்னகை தானே
எங்கள் நம்பிக்கையின் ஊற்று..
என்ன வேண்டும் என்று
உரிமையோடு கேட்டுவிட
எங்களுக்கு உங்களை விட
யாரும் வாய்த்ததில்லை..
எங்கள் காதலை பங்குபோட
ஒரு மகள் பிறந்த பிறகே
உணர முடிகிறது அம்மாவின்
பெருமித வலியை – என்றாலும்
இப்போதும் விட்டுத் தர
மனம் மட்டும் வருவதில்லை..
இன்னொரு பிறவி இருந்தால்
தன் மகள் முன்னே
சேயாய்க் கரையும் அந்த
நேசமிகு தகப்பனுக்கு
மகளாய்ப் பிறக்க வேண்டும்…
பாசம் வீசி பறித்துச் சென்ற
எமன் முன்னே – எங்கள்
பாசம் கொட்டித் தீர்க்க வேண்டும்…
– கிருத்திகா கணேஷ் கவிதைகள்
Image credit: freepik