Image Credit: freepik.com
கால சுழற்சி, திருமணமாகி தந்தை என பதவி உயர்வு வந்ததும் ஆணாகப்பட்டவன் காலம் எனும் ரோலர் கோஸ்டர் எனும் உருள் வண்டியில் பயணிக்க தொடங்குகிறான். குழந்தை பிறந்து சிறிது வளரவும் துவக்கப் பள்ளியில் தொடங்கி கல்லூரி மேற்படிப்பு வரை அவர்களை நல்லவர்களாக வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து, பிறகு அவர்கள் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கையை துவக்கும் தருணத்தில் திருமணம் செய்து வைத்து அதுவரை குடும்பத்துடனே பயனித்துக் கொண்டிருந்த தகப்பன் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து ஓய்வு பெரும் தருவாயில் தான் வந்த பாதையை தன் குடும்பத்தை திரும்பி பார்க்கிறார்.
எவ்வளவு தூரம் எத்தனை காலம் உருண்டோடி விட்டது. எவ்வளவு பாரங்கள், எத்தனை இழப்புகள், சேர்த்தது சேமித்தது உருவாக்கியது என அணைத்தையும் அசைப் போடும் நேரத்தில் உடல் உபாதைகள் ஆரம்பம். ஆஸ்திக்கு ஒரு மகன் ஆசைக்கு ஒரு மகள் என்பது சொல் வழக்கு. ஆசைக்கு பெற்ற மகளுக்கு உரிய கல்வியை கொடுத்து அதிலும் பாதுகாத்து வளர்ப்பது பெரிய சவால் என்றாலும் மகளுக்கு பொறுப்புள்ள ஆண்மகனை தேடி வெற்றிகரமாக வாழ்கை அமைத்து கொடுப்பதில் இருக்கிறது தகப்பனின் சாமார்த்தியமும் பொறுமையும். ஆஸ்திக்கு பெற்ற மகனுக்கு உரிய உயரிய கல்வியை கொடுத்து பொறுப்புகளை கற்று கொடுப்பது சவாலுக்கே சவால் ஆகிறது.
மகனுக்கு மகளுக்கு திருமணம் செய்து முடித்தாலும் தகப்பனுக்கு சில பொறுப்புகள் தொடரத்தான் செய்கிறது. பிள்ளைகளால் கிடைக்கும் பெறுமை ஆதரவு அரவணைப்பு அவரை மேலும் சிறிது காலம் தாங்கி பிடிக்கிறது. இந்த உருள் வண்டியில் எங்காவது எப்பொழுதாவது பழுது ஏற்பட்டால் பாதை முடக்கப்பட்டு விடுகிறது. நம் வாழ்க்கையில் நம்மை சுற்றி இருக்கும் முக்கிய உறவுகளில் போற்றப்பட வேண்டிய மிக முக்கிய உறவு தந்தை. ஒவ்வொரு தந்தைக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறார், உணர்ந்தால் குடும்பம் செழிக்கும்.
எழுதியவர்: பத்மா