தொடுவானம்

0
213

Sunset or sunrise in ocean, nature landscape.

”முனியாண்டி ,ஏய் முனியாண்டி  சத்தமா வாசலிலிருந்து கூப்பிட்டார்…

தலையை சொறிந்தபடி வாளியை கையில் பிடித்தபடி வந்தவன் ”சொல்லுங்கள் அய்யா..”

”ஏன்டா ”எத்தனை நாளா சொல்லிவிடுவது அந்தளவுக்கு பெரியமனிஷன் ஆயிட்டிங்க திட்டிவர் வடிகால் அடைச்சிருக்கு சாக்கடை தேங்கி நிற்கிறது.. எத்தனை நாட்கள் நாற்றத்திலே இருப்பது சொல்லியவர் அந்த வழியே வீட்டின் பின்பக்கம் வா …

சரி சரி தலையாட்டிவன் தயங்கியபடி ” அய்யா ” வீட்டில கஞ்சி காய்ச்ச அரிசி வேணும் பணம்  கொடுத்தா நான் போய்  வாங்கி கொடுத்துவிட்டு வந்துவிடுவேன் …

முகத்தில் கோபத்துடன்” என்னடா” என்னமோ பணம் கொடுத்து வச்ச மாதிரி கேட்கிற.
”நீ” பணத்தை வாங்கிக் கொண்டு
வேலை முடிக்காமல் போய்ருவே.. முதலில் வேலை முடித்து பணத்தை வாங்கிட்டு போய்கிட்டே இரு.

”ம் சரிங்க அய்யா ” முணுமுணுத்துக் கொண்டே பின்னால் போய் வேலை செய்ய ஆராம்பித்தான். கையில் கிளவுஸ் முககவசம் இல்லாமல் முகமும் சுளிக்காமல் வேலையை செய்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து ”ராமு” தன் அப்பாவை தேடி வந்தவந் .. வெளியே இருந்தே ”அப்பா அப்பா” கூப்பிட உள்ளே இருந்து வெளியே வந்த பசுபதி” நீ” முனியாண்டி மகன் தானே .

”ஆமாங்க ..”

இன்னும் வேலை முடியல அதுக்குள் கூப்பிட வந்துவிட்டயா…வேலை முடிச்சிட்டு வருவான் ”நீ ”கிளம்பு சொல்ல..

”இல்லைங்க” அப்பாவை பார்த்துவிட்டு போகிறேன் ராமு சொன்னான்.

அப்படியே அந்தபக்கமா போ பின்பக்கம் வழி சொன்னவர் வீட்டின் கதவை செய்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

பின் பக்கம் போன ராம் அங்கு அப்பா செய்கிற வேலையை  பார்த்து திகைத்து கண்களில் கண்ணீர் தேங்க நிற்க..

முனியாண்டி அடைத்துகொண்டிருந்த குப்பைகளை கையில் எடுத்து ஓரமாக போட்டு கொண்டிருந்தான்.

அப்பா, அப்பா கூப்பிட திரும்பிய முனியாண்டி மகனின் கண்களில் கண்ணீரைப் பார்த்தும்  திகைத்தவன் அங்கிருந்த பைப்பில் கையை கழுவிவிட்டு வந்தவன்” ஏன் ராசா” இங்கே வந்தே நானே வந்திருப்பன்ல ..

அம்மா அரிசி வாங்க பணம் வாங்கிட்டு வரச் சொல்லுச்சு அது தான் வந்தேன்பா..

வேலை முடிச்சிட்டு அரிசி வாங்கிட்டு வரேன் சொல்லு அம்மாவிடம்…

”இல்லை பா ”நான் இங்கே இருக்கேன் வேலை முடிங்க. சேர்ந்து போகலாம் சொன்னவன் அங்கிருந்த கல்லில் அமர்ந்தான்.

மீதி வேலை வேகமாக முடித்துவிட்டு வந்த முனியாண்டி
”அய்யா அய்யா” கூப்பிட ..

”என்னடா ”வேலை முடிச்சிட்டியா..

”ம்” முடித்துவிட்டேனுங்க…

”சரி இரு” பணம் எடுத்து வரேன் பசுபதி உள்ளே போக அவருடைய மனைவி ராசம்மா ஒரு பிளாஸ்டிக் கப்பில் சிறிதளவு ”டீ ”கொண்டு வந்து வாசற்படியில் வைத்துவிட்டு இதை குடிச்சிரு சொல்லிவிட்டு உள்ளே சென்று விட ..

கப்பை கையில் எடுத்தவர் அதை தன் மகனிடம் நீட்ட அதை வாங்கியவன்  ஆடைக் கட்டி ஆறிப்போன டீயை பார்த்தும் குமட்டிக் கொண்டு வந்தது.. அப்பா இந்த ”டீ ”வேண்டாம் வாடை அடிக்கது சொல்ல …

”கொண்டா நான் குடிக்கிறேன்” முனியாண்டி  சொல்ல ..

”வேண்டாம் பா ”அதை தூக்கி எறிந்தான் குப்பையில்..

அதைப்பார்த்தபடி வெளியே வந்த  பசுபதி கோபத்துடன் ”ஏன்டா ”உனக்கு டீ போட்டுக் கொடுத்தா குப்பையில் போடுவாயா… கொழுப்பு கூடிவிட்டது உனக்கு திட்டியவர்
நூறு ரூபாய் தாளை அங்கிருந்த கல்லில்  வைத்து எடுத்துக்கோ சொல்ல…

”அய்யா” இன்னும் கொஞ்சம் சேர்த்தி கொடுங்கள் காலையிலிருந்து செய்கிறேன் கெஞ்சினான் முனியாண்டி.

என்ன பெரிசா செய்த அடைத்திருந்த சாக்கடையை எடுத்துவிட்டது தானே .. இதுவே அதிகம் கிளம்பு கிளம்பு சொல்லவும் ..

கல் மேல் வைத்திருந்த ரூபாய் எடுத்துக் கொண்டு கிளம்பிய முனியாண்டி ”வாப்பா” போகலாம் மகனை அழைத்தார்.

அப்பா ”ஒரு நிமிசம் இருங்கள்” சொன்னவன் பசுபதியை பார்த்து ”அய்யா” கூப்பிட..

”என்னடா சொல்லு..”

காலையிலிருந்து வேலை செய்கிற அப்பாவிற்கு வாடை அடிக்கிற டீயை கொடுத்துவிட்டு
வெறும் நூறு ரூபாய் மட்டும் தரீங்க.. நீங்கள் செய்த அசுத்தத்தை அறுவெறுப்பில்லாமல் சுத்த செய்கிற மனுஷனுக்கு மரியாதை இல்லை .. இனி இந்த வேலை நீங்களே செய்து கொள்ளுங்கள்.  அந்த டீயும் நூறு ரூபாய்யும் மிச்சமாகும் சொன்னவன் தன் அப்பாவின் கைப்பிடித்து கிளிம்பினான் ராமு…

”என்னப்பா இப்படி பேசிட்டே..”’ நாளைக்கு எதும் வேலை இருந்தா கூப்பிட மாட்டாங்கல பா..ஒரு நேர கஞ்சிக்கே கஷ்டபடனும் பா சொன்னான் முனியாண்டி ..

அப்பா அவர் பேசியது பிடிக்கல .. நாம் அவர் வீட்டுக்கு வேலைக்கு தான் வந்தோம்.. சும்மா பணம் வாங்கிட்டு போகயல்ல .. நீங்கள் அவரைவிட பெரியவங்க .. பெயரை சொல்லியாவது கூப்பிடலாம்.. டீ தண்ணீயா இருந்தாலும் வாடை இல்லாத டீயை கொடுக்கலாம்.  அதைவிட செய்த வேலைக்கு கூலியை கையிலாவது கொடுக்கலாம். நாம் செய்த வேலைக்கு பணம் வாங்குகிறோம். சும்மா தரவில்லை தானே ..அவர்கள் செய்த அசுத்தத்தை அவர்களால் செய்ய முடியாமல் நம்மை வேலைக்கு கூப்பிட்டாங்க . நாமும் கையில் கிளவுஸ் இல்லாமல் அறுவெறுப்பு இல்லாமல் செய்கிற நமக்கு மனுஷன் மதிச்சு பேசினால் போதும் பா சொன்னவனை அணைத்தான் முனியாண்டி

இது இப்ப மட்டுமல்ல ராமு..தாத்தா காலத்தில இருந்தே இப்படி தான். எங்க அப்பா செய்தார் .இன்று நான் செய்கிறேன் நாளைக்கு நீ செய்வாய்..இப்படி தான் போகும்.
விடு கண்ணு இது எல்லாம் பழகி போச்சு..

அப்பா நாளைக்கு நான் செய்கிறனா இல்லை படித்து பெரிய உத்தியோகம் போனால் அங்கு என்னை மதிப்பார்களா .. இல்லை அங்கு இப்படி மரியாதை இல்லாமல் பேசுவார்களா …
ஏக்கத்துடன் அப்பாவை பார்த்து கேட்டான் ராமு.

முனியாண்டி திகைத்து “என்ன” பதில் சொல்வது அறியாமல் மகனை அணைத்துக் கொண்டான் அவனுடைய தன்மானத்திற்கு பதிலறியாமலே.

சசிகலா எத்திராஜ்,
கரூர்.