உலகம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கையில், இன்னும் பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் கதைகளை எழுதிக் கொண்டும், அவற்றையே சிலாகித்துக் கொண்டும் ஒரு கற்பனை உலகில் மிதக்கும் பெண்கள் அதிகமிருக்கும் சூழலை எதிர்கொண்டிருக்கிறோம்.
பெண்களே தம்மை அடிமைக்குள்ளாக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பது, தொடர்ந்து இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பெண் இனத்தையே அடிமைத் தளைகளின் கட்டுக்கள் இறுக்கிப் பிடிக்க தாமே பாதை அமைத்துக் கொடுப்பதாகவே அமையும்.
இங்கு பெண் சுதந்திரம் என்பதோ, பெண்ணுரிமை என்பதோ ஆண்கள் செய்யும் தவறுகளைத் தாமும் செய்து அவர்களுக்கு இணையாக இருப்பதாக காட்டிக்கொள்வதல்ல.தவறான பாதையெனில் அது ஆணானாலும் பெண்னானாலும் தவறே. வேண்டியது பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றம். அதற்கு முதலில் பெண்கள் இப்பிற்போக்குவாத குப்பைகளில் இருந்து மீண்டு தமது இனத்தின் மேன்மைக்கு வித்திடும் படைப்புகளை படைக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்து, அதுவே சுகமென்ற லயிப்பில் ஊறிக் கிடப்பது, நம் வருங்கால சந்ததியினருக்கும் செய்யும் துரோகமாகும். எவ்வகைக் கலைப்படைப்பானாலும் சரி, அதில் பாலியல் ஏற்றத் தாழ்வுகளை புகுத்தியே, நம் மனதில் ஏற்றி வைத்திருக்கும் அடிமை எண்ணத்தை விட்டொழிக்க, அதே கலைப் படைப்புகளை பாலியல் சமத்துவத்தோடு படைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். படைப்புகளின் வழியே தான், ஆழ் மனதில் வேறூன்றிய இத்தகைய தளைகளைத் தகர்த்தெறிந்து சமத்துவ சமூகம் நோக்கி முன்னேற இயலும்.
பாலியல் சமத்துவம் உள்ள இடத்தில், வேறு எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் எடுபடாது என்பதும், நம் சாதி, மத, இன,கலாச்சார, வரக்கப் பேதங்களைக் கலைய, முதலில் பாலியல் பேதங்களைக் கலைய வேண்டும் என்பதும், அவற்றை முன்னெடுக்கும் பொறுப்பு பெண்களின் கைகளிலேயே தான் உள்ளது என்பதை நாம் உணர்வதுமே இச்சமூகத்தை மீட்டெடுக்கும்.
- ராஜலக்ஷ்மி