உயர்ந்த பெண்

market

நாகஜோதி தனது சைக்கிளில் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டை நோக்கி சொன்று  கொண்டிருந்தாள். பதினோராம் வகுப்பு படிக்கும் அவள் அரையாண்டுத் தேர்வில் இயற்பியலில் முழு மதிப்பெண்கள் பெற்றதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.  வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்த நிலைமை தலைகீழாக இருந்தது. அவளின் அம்மா குப்பம்மா கவலையுடன் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தாள். இந்நிலையில் தனது மகிழ்ச்சியை பகிர்வதா வேண்டாமா என தயங்கினாள்.   நாகஜோதி தயங்கி நிற்பதை கண்ட தாய் “என்ன நாகு” என அவளிடம் வினவினாள். பின்னர் தான் முழு மதிப்பெண் பெற்றது பற்றி கூறிய உடன் குப்பம்மாவின் முகம் மாறியது. அதன்பின் , “சரி போய் முகம் கழுவிட்டு வா, டீ போட்டு வைக்கிறேன் ” என குப்பம்மா கூறினாள்.  தனது பேச்சிற்கு வீட்டில் மதிப்பில்லை என்று தெரியும் ஆனால் இப்படி உதாசீனப்படுத்தும் அளவுக்கு என்னாயிற்று என்ற யோசனையுடனே குப்பம்மா கொடுத்த டீயை குடித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவள் தாய் மெதுவாக அவளிடம், “கல்யாணம், குட்டினு ஆகப் போற நேரத்தில் படிச்சு என்ன ஆகப் போகுது நாகு….”  தனக்கு பின் இரண்டு தங்கைகள் இருப்பதால் சீக்கிரம் தனக்கு திருமணம் முடிப்பார்கள் எனத் தெரியும், ஆனா பள்ளி முடிக்கும் முன்பே இருக்கும் என்பது அவளுக்கு அதிர்ச்சி தான்.  “சரிம்மா, இப்போ ஏன்…. ” என முடிக்கும் முன்னே, ” உனக்கு போன மாதமே திருமணம் பேசி முடித்தாயிற்று” என குப்பம்மா கூறியதை கேட்டு நாகேஸ்வரிக்கு மூச்சயடைத்தது.   “கலியாணத்த வர்ற வெள்ளிக்கிழமை வைக்க சொல்லிட்டு இப்போ தான் மாப்பிள்ளை வீட்டிலே சொல்லிட்டு போறாங்க”  என அவளின் தாய் கூறி முடித்தாள்.   நாகஜோதிக்கு கண்ணீர் தாரையாக தாரையாக கொட்டியது, இதனை கண்ட குப்பம்மா அவளின் தலையை தடவினாள்.  “எனக்கெல்லாம் என் கலியாணத்தை அன்னிக்கு தான் சொன்னாங்க, 13 வயசுல அவங்க சொன்னது கூட எனக்கு புரியல புது துணி, பூவெல்லாம் தராங்களேனே சந்தோசமா இருந்தேன், ஆனா அன்னைக்கே யார்னே தெரியாதவங்க வீட்டுக்கு ஏன் போக சொல்றவங்கா னு தெரியாமா பயத்துடன், அழுதுட்டே போனேன். அதுக்குப்புறம் இங்க இன்னைய வரைக்கும் மாடு மாதிரி வேலை செய்றேன் அவ்வளோ தான் “, அப்படி னு இந்தியாவின் சராசரி பெண்களின் நிலையான  தனது நிலையையும் கூறினாள்.
அதன்பின் திரும்பி பார்ப்பதற்குள் நாகஜோதியின் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. அவள் கணவன் முத்து (எ) முத்துக்குமாரசாமி கடலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒரு சிறியக் கடையை வாடகைக்கு வைத்திருந்தான். அதில் வரும் வருமானத்தை வைத்து தான் தந்தை இல்லாத தனது குடும்பத்தில் தாயின் நோயையும், சகோதரிகளுக்கு முடித்த திருமணம் உட்பட கடைக்கான வாடகையும் கவனித்து வந்தான்.  நாகஜோதிக்கும் , முத்துவுக்கும் பத்தாண்டுகள் வயது இடைவெளி இருந்தாலும் , நாகுவிடம் இருந்த புத்தி கூர்மையால் குடும்பம் அமைதியாக சென்றுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.   அப்போது தான் நாகுவுக்கு அடுத்த துயரம் ஆரம்பித்தது. முத்துவிற்கு குடும்பக் கஷ்டத்தை மறக்க ஆரம்பித்த மதுப்பழக்கம் நாளடைவில் தினசரி பழக்கமானது. முத்துவும் மதுப்பழக்கத்தை விட முயற்சித்தான், ஆனாலும் தெருவுக்கு தெரு கண்ணில் படும் டாஸ்மாக் கடையை தாண்டி போக அவனால் முடியவில்லை.
நாளுக்கு நாள் மதுப்பழக்கம் அதிகரித்தது, போதையிலே எந்நேரமும் இருந்ததால் கடையில் வருமானம் குறைந்தது. இதனால் நாகுவுக்கு மனச்சுமையுடன், குடும்ப சுமையையும் அதிகரித்தது.   நாகு தனது கணவனை மதுப்பழக்கத்தை மறக்க வைக்க போதை தடுப்பு மையத்தில் சேர்த்து மீட்டு வந்தாள். வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டாலும், கணவனை உயிருடன் மீட்கவே நாகு முழுமையாக இறங்கினாள். இதனால் தனது மகள்களின் படிப்பும் பாதிக்கப்பட்டதையும் அவள் பெரிதாக எடுத்திக் கொள்ளவில்லை.  இனி மதுவை தொடக்கூடாது என்ற மருத்துவரின் எச்சரிக்கையுடனே முத்து வீடு  திரும்பினான். “கல்லீரல் முழுசும் அழுகிடுச்சாம், இதுக்கு மேலையும் குடிச்சேனா நாங்க தெருவுல நிக்க வேண்டியது தான்” என கணவனிடம் நாகு வேதனையுடன் கூறினாள். “என்ன நாகு இனி நான் சாராயத்த தொடவே மாட்டேன்” என அவளின் தலையில் அடித்து சத்தியம் செய்தான் முத்து.   கொடுக்கப்படும் அனைத்து சத்தியங்களும் அதனை மீறும் எண்ணத்தையே மனிதனிடம் தலைதூக்கும், அதில் வெற்றியும் பெறும்.  இதில் சாமானியான முத்து மட்டும் என்ன செய்வான், வீட்டில் இருந்தவரை தனது கை நடுங்கும் போதெல்லாம் தனக்காக கடைக்கு செல்லும் மனைவி, மகள்களை பார்த்து குடிக்க கூடாது என கட்டுப்படுத்திக் கொள்வான்.
சில நாள் கழித்து கடைக்கு சென்ற வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் அவனது உடல்நிலையை பற்றி சக வியாபாரிகள் நலம் விசாரித்தனர். அப்போது , “நீ கடன் 50000 ரூபாய் தரனும் னு எண்ணம் இருக்கா முத்து”   உடனே முத்து, “இல்லண்ணே ஆஸ்பித்திரில இருந்ததால் எதுவும் புரட்ட முடில”   “உன் சொந்தப் பிரச்சனையை கேட்க நான் வரல , உடனடியா பணத்தை தரல, கடையை எனக்கு விட்டுடு ” என கடன்காரர்கள் கடுமையாக பேசிவிட்டுச் சென்றனர்.   மதிய வேளை சாப்பிட்ட பின் நாகு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாளா என நோட்டமிட்டுவிட்டு பெரியசாமி முத்துவிடம் பேச்சு கொடுத்தார்.   “கடன்காரன் சத்தம் போடறதெல்லாம் நம்மள மாதிரி சம்சாரிகள் சாதாரணமாக எடுத்துக்கனும் ஏன்னா பணத்தை நாளைக்கு சம்பாதிச்சு கொடுத்திடலாம், ஆனா…” என பெரியசாமி இழுக்கவும்.  முத்து புரியாமல் முழித்தான், “ஆனா… என்னாச்சு ஐயா” என முத்து பதட்டமானான்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட உடல் என்பதால் அவனுக்கு வேர்த்து கொட்டியது.  பெரியசாமி தொடர்ந்தார், “நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் பா, உன் சம்சாரம் கடை வந்து வியாபாரம் மட்டும் பண்ல….”  அவர் முத்துவை கடைக்கண்ணல் சோதித்தார், அவன் என்னவாக இருக்கும் என பதட்டமடைந்து இருப்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. அதனால் மேலே விசத்தை தடவி பேசினார்.  “இங்க பாரு … வீட்ல ஆம்பளை இல்லைனா இப்படியெல்லாம் நடக்கும் தான், நீ என் மவன் மாதிரி அதனால எச்சரிக்கிறேன், நாகுவும், அந்த பலசரக்கு கடை கிருஷ்ணன் பயலும் பேசி சிரிக்கிறது பார்க்கிறதுக்கு நல்லா இல்ல”  “கடையில மட்டும்மில்லாம வெளியிலும் இரண்டு பேரும் சேர்ந்து சுத்துனதா நிறைய பேரு என்கிட்ட சொன்னாங்க அதனால உன் பெண்டாட்டி ய கண்டிச்சு வை” என விசத்தை கக்கிவிட்டு பெரியசாமி கிளம்பிவிட்டார்.  தன்னை பார்க்க வந்த சிலர் மனைவி நாகுவை அருகில் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் உடன் இணைத்து பேசியது. முத்துவின் மனதை கொடூரமாக தாக்கியது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தால் அது ஆணிற்க்குள் பயத்தை உண்டு பண்ணும்.   இச்சமூகம், “ஏன்டா, பொட்டையா நீ ; பொம்பள மாதிரி அழாத ” என ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்றும், பெண் தாழ்ந்த இனம் தான் என இந்த உலகம் பறைசாற்றி கொண்டே உள்ளது.  எனவே குடும்பத்திற்காக பாடுபடும் நாகுவை எங்கே மேலே வந்துவிடுவாளோ என்ற அச்சத்தினால் தான் பேசுகிறார்கள் என்பது எப்படி முத்துவுக்கும், அவள் பெற்ற பிள்ளைகள் மட்டும் புரியும்.  முத்து மதுவை மறக்க நினைத்தாலும் ,இந்த கீழ்தர பேச்சுக்கள் மனதை துளைத்தெடுத்தது. வீட்டிற்க்கு செல்லும் முன் கடக்கும் பல டாஸ்மாக் கடைகளால் தூண்டப்பட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்.  இதை எதிர்த்த நாகுவுக்கு முத்துவின் பதில், “நீ சரியா இருந்தா நான் ஏன் குடிக்க போறேன் , கிருஷ்ணன் மட்டும் தானா ?இன்னும் எத்தனை பேருடன் உறவு வைச்சுருக்கே  ” இந்த கேள்வியால் நிலைகுலைந்த நாகேஸ்வரி பதில் சொல்லவில்லை.
மகள்கள் அச்சத்துடன் பெற்றோரை பார்த்தப்படி அமர்ந்து இருந்தனர்.   நாகு மெதுவா தனது கணவனிடம், “இந்த ஆறு மாசமா நீ கடைக்கு போல , வருமானம் இல்லாமல் நான் எப்படி என் மாமியாரையும், குழந்தைகளையும் காப்பற்றினேன் நீ என்கிட்ட எப்பாவது கேட்டுருக்கியா…”  “சரி குடும்பத்தை காப்பாற்ற எப்படியும் பாடுபடுவேன் , அதையாவது நீ என் நம்பிக்கை வைச்சுருக்கேன் இருக்கட்டும்”  “ஒரு ஆண் துணை இல்லாத குடும்பத்தை நடத்த பெண்ணிற்கு , அடுத்தவனுக்கு முந்தானையை விரிக்கிறதுவிட்டா வேற வழி இல்லை னு, நீ அப்போதிலிருந்து பார்த்த சினிமா சொல்லிருக்கும் தெரிவுல போறவன் பேசிருப்பான்”,   “ஆனா… உன் அப்பன் செத்த உடன் உன் அம்மா கஷ்டப்பட்டது கூடவா உனக்கு தெரில…..”நாகுவுக்கு பேசிபேசி மயக்கமே வந்துடுச்சு.   தனது கணவனை, மகள்களை காப்பற்றுவது மட்டுமே யோசித்தவளுக்கு இந்த மாதிரியான கீழ்தர வசவுகளால் சுருண்டுப் போயிருந்தாள்.   தாயின் நிலை புரிந்து மகள்கள் சுதாரித்து தண்ணீர் கொடுத்து அவளை அமைதிப்படுத்தினார்கள். அவளின் மாமியாரும் முத்துவை, கடுமையாக கண்டித்தார், “ஊர் பேச்சை வீட்டுக்கு கொண்டு வருவது தப்பு டா ” எனத் திட்டினாள்.  மேலும் ,” நா உனக்கு துணையா இருக்கேன் கண்ணு நீ வருத்தப்படாத ” என மாமியார் ஆதரவாக பேசியது நாகுவிற்கு புது தெம்பை கொடுத்தது.
மறுநாள் காலையில் முத்து மதுவினால் இரத்தம் கக்கி இறந்து போனான். நாகு தனது பதினெட்டு ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்ததை நினைத்து அழக்கூட முடியவில்லை, இந்த ஊரின் ஏச்சுக்கள். முத்து தற்கொலை செய்து கொண்டதற்கு அவளின் நடத்தை தான் என்ற பேச்சுக்களால் அவள் உயிரோடு செத்துக் கொண்டிருந்தாள்.  அப்போது தான், ” வயசாகி என் புருசன் செத்த பிறகு என்னை மட்டும் இந்த உலகம் விட்டுவைச்சுதா, இவங்கள எல்லாம் விட்டுத் தள்ளு, நமக்கு நம்மள பத்தி தெரியும்” என அவளின் மாமியார் கூறியதை கேட்ட பின்பு நாகு புயலென கிளம்புனாள்.   வணிகத்துக்காக மாமியார், மருமகள் உறவை எதிரிகளாக கதைகளில் சித்தரிக்கப்பட்டது, தனது குடும்பத்திற்காக பெண்கள் தங்கள் உயிரையும் கொடுக்கும் சமூகம் இது என்பதை  உணராமல் பலர் உள்ளனர்.  நாகு இந்த பேச்சுக்களை உதறிவிட்டு தனது கடை, மகள்கள் , மாமியாரை கவனிக்க தொடங்கினாள்.   சுய உதவிக் குழுவில் இணைந்து தொடர்ந்து அயராது உழைத்து கடையை மேம்படுத்தினாள். கடன்களை சிறுகசிறுக அடைக்க முயன்றதால் கடன்காரர்களின் ஏச்சுக்களும் குறைந்தது.   ஆனால் முத்து இறந்த பிறகு அந்த கடையை கைப்பற்ற நினைத்தவர்களுக்கு நாகு கடையை மேம்படுத்தி வருவது சிக்கலாக இருந்தது. எனவே அவர்கள் நாகு பற்றி தொடர்ந்து வதந்ததிகளை பரப்பினர்.
பெரியசாமி தனது கடைக்கு வருவோரிடம், “அவ இப்படித் தானு எனக்கு முன்னாடியே தெரியும், இப்படி ஊர்சுத்தரா னு முத்து கிட்ட சொன்னேன் , முத்து கண்டிச்சும் அவனை மதிக்காம எப்பவும் சிங்காரிச்சுட்டு திரிவா” என கூறிக்கொண்டே இருந்தார். இது போன்ற பேச்சுக்களால் நாகுவை பலவீனப்படுத்தி , அவளை நசுக்க அந்த கும்பல் முயற்சித்து தோற்றுப்போனது.  காலை முதல் இரவு வரை தொடர்ந்து உழைத்தாலும் , யாரிடமும் முகம் கோணாமல் வியாபாரத்தை கவனித்தாலும் வருமானமும் பெருகியது. இதனால் சக வியாபாரிகளின் பொறாமைக்கும் நாகு ஆளானாள்.   நாகுவின் பெரிய மகள் வடிவு, ” ஏம்மா உன்னை மட்டும் இப்படி பேசிட்டே இருக்காங்க?” எனக் கேட்டாள்.  தந்தையை இழந்து பதிமூன்று பருவ வயதில் இருக்கும் மகளுக்கு என்ன சொன்னாள் புரியும் என நாகுவிற்கு தெரியவில்லை. இருந்தாலும் பெண் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாள் வேறு யாரும் குழப்பும் முன் நாம் தெளிவுபடுத்த வேண்டும் என நாகு முடிவெடுத்தாள்.  நாகு தன் மூத்த பெண் வடிவிடம், ” நான் கடைல நல்ல வியாபாரம் செஞ்சு காசு பார்க்கிறேன் , இந்த மாதிரி ஒரு ஆம்பளைக்கு நடந்தால் அதை ஒருவித பெருமூச்சுடன் எல்லாரும் கடப்பார்கள்.
அதுவே நான் ஒரு கணவனை இழந்த பொட்டச்சி எப்படி தனி ஆளா தலையெடுப்பா அப்படி ஆணுக்கு அகங்காரம் , இதனால அவளிடம் தோற்றதாக அவங்களை  நினைக்க வைக்குது, ஆண் பதமே இல்லாத பல கெட்ட வார்த்தைகள் இருக்கிறப்பவே தெரிலையா இந்த உலகம் சரிசமமா இல்லைனு ” என கூறி முடித்தாள்.   வடிவுக்கு பாதி புரிந்தது , பாதி புரியவில்லை, ஆனால் நாகுவின் மாமியார் தன் மருமகளுக்கு ஆதரவாக நின்றாள். அதனால் பேத்திகளின் ஜயத்தை எல்லாம் தெளிவாக்கினாள், அவர்களை நல்வழிப்படுத்தினாள்.  பெண்ணிடம் தோற்பதை ஆண் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அவமானமாக நினைப்பதால் தான் அத்தனை ஆதிக்கத்தையும் செலுத்துகின்றான். பெண்ணின் மறுப்பை ஏற்க இந்த சமூகம் தயாராகவே இல்லை. இதையெல்லாம் கடந்து தான் நம் நாட்டு பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.  நாகஜோதியும் தனது குடும்பத்திற்காக அனைத்து இன்னல்களையும் சந்தித்து முன்னேறி வருகிறாள்.
ஜெயா
Back To Top